அனைத்து ரயில் பாதைகளும் மின்மயம்

சேலம், ஆக.6: சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் பாதைகள் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது என்று  67வது ரயில்வே வாரவிழாவில் கோட்ட மேலாளர் கௌதம்நிவாஸ் கூறினார். சேலம் ரயில்வே கோட்டத்தின் 67வது ரயில்வே வாரவிழா நேற்று, கோட்ட அலுவலக கலையரங்க கூடத்தில் நடந்தது. கோட்ட மேலாளர் கௌதம்நிவாஸ் தலைமை வகித்தார். கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் வரவேற்றார். தொடர்ந்து, கடந்த நிதியாண்டில் சேலம் கோட்டம் செயல்படுத்திய திட்டங்கள், பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

பின்னர், கோட்ட மேலாளர் கௌதம்நிவாஸ் பேசுகையில், ‘‘கோட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதால், பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்த முடிந்துள்ளது. சிலருக்கு மட்டும் விருது, சான்றிதழ் கிடைத்தாலும், அனைவரின் பங்களிப்போடு தெற்கு ரயில்வேயில் சிறப்பிடத்தை பெற்றுள்ளோம். சரக்கு போக்குவரத்தில் வரலாற்று சாதனையாக கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 3 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்டு 100 சதவீதம் மின்மயமான கோட்டமாக மாற்றப்பட்டுள்ளது. கடைசியாக சேலம்-விருத்தாச்சலம் பாதை மின்மயமாகியுள்ளது.

இந்திய பசுமை கட்டமைப்பு கவுன்சில் (ஐஜிபிசி) சார்பில் கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு பசுமைக்கான பிளாட்டினம் விருது வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் 6வது ஸ்டேஷனாகவும், தெற்கு ரயில்வேயில் முதல் ஸ்டேஷனாகவும் இவ்விருது கிடைத்திருக்கிறது,’’ என்றார். தொடர்ந்து, சிறந்த செயல்பாட்டிற்காக கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கோட்ட மேலாளர் வழங்கினார். அதில், சிறந்த ஸ்டேஷன் பராமரிப்பிற்கான விருது சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் (பெரியது), தொட்டம்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கும் (சிறியது) வழங்கப்பட்டது.

சிறந்த காலனி பராமரிப்பு விருதை சங்ககிரி ரயில்வே காலனியும், சிறந்த ரன்னிங் ரூம் பராமரிப்பு பணி கேடயம் ஈரோட்டிற்கும், சிறந்த சிக்னல், டெலிகாம் பராமரிப்பு விருது கரூருக்கும், சிறந்த சுகாதாரத்திற்கான விருது ஈரோடு ஸ்டேஷன் பிரிவுக்கும், சிறந்த டிக்கெட் பரிசோதனை குழுவிற்கான விருது சேலம் ரயில்வே ஸ்டேஷனில் பணியாற்றும் வணிகப்பிரிவினருக்கும் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 350 ஊழியர்களுக்கு சிறந்த பணிக்கான சான்றிதழ்களை கோட்ட மேலாளர் வழங்கினார். பின்னர், ரயில்வே ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இவ்விழாவில், முதுநிலை பணியாளர் நல அலுவலர் சௌந்தரபாண்டியன், முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: