மீக்கேரி பகுதியில் ஓடை நிலம் மீட்பு

மஞ்சூர்: மஞ்சூர் அருகே மீக்கேரி பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 2 ஏக்கர் ஓடைபுறம் போக்கு நிலத்தை வருவாய்துறையினர் மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் ஓடைபுறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்ற வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குந்தா தாலுகா கீழ்குந்தா, பிக்கட்டி, இத்தலார் வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஓடைபுறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து அங்கு தேயிலை, மலைகாய்கறிகள் உள்ளிட்ட பயிரிட்டு விவசாயம் செய்வதை கண்டறிந்து வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று பாலகொலா கிராமம் மீக்கேரி பகுதியில் ஓடைபுறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மாலை காய்கறிகள் பயிரிட்டுள்ளதாக வருவாய்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, குந்தா தாசில்தார் இந்திரா தலைமையில் வருவாய் ஆய்வாளர் வேடியப்பன், கிராமநிர்வாக அலுவலர் மோகனபிரியா மற்றும் கிராம உதவியாளர்கள் வருவாய்துறையினர் கல்லக்கொரை பகுதிக்கு சென்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அப்பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி நிலத்தை மீட்டனர். தொடர்ந்து வருவாய் துறைக்கு சொந்தமான அவ்விடத்தில் அத்துமீறி யாரும் உள்ளே நுழையக்கூடாது எனவும், இதை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்யும் வகையில் அறிவிப்பு பலகையை அமைத்தனர்.

Related Stories: