மகளிர் சுய உதவிக்குழுவுக்கு வங்கிக்கடன் தந்து தொழில் முனைவோராக மாற்றுவேன்: நீலகிரி பாஜ வேட்பாளர் எல்.முருகன் பேச்சு

மேட்டுப்பாளையம், ஏப். 18: மகளிர் சுய உதவிக்குழுவுக்கு வங்கிக்கடன் தந்து தொழில் முனைவோராக அவர்களை மாற்றுவேன் என மேட்டுப்பாளையத்தில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் எல்.முருகன் பேசினார். பாராளுமன்ற தேர்தல் நாளை (19ம் தேதி) ஒரே கட்டமாக தமிழகத்தில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது.

இதனை முன்னிட்டு அதிமுக, திமுக, பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டனர். நீலகிரி தொகுதி பாஜ வேட்பாளரும், ஒன்றிய இணையமைச்சருமான எல்.முருகன் நேற்று அன்னூரில் இருந்து இரு சக்கர வாகனங்களில் பேரணியாக தென் திருப்பதி நால் ரோடு, காரமடை, டீச்சர்ஸ் காலனி, குட்டையூர் வழியாக சென்று பின் அங்கிருந்து மேட்டுப்பாளையம் வந்தடைந்தார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே வந்த அவருக்கு பாஜகவினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் பேசியதாவது: மேட்டுப்பாளையத்தை பொறுத்தவரை போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதி என்பதால் வெளிவட்டச்சாலை (அவுட்டர் பைபாஸ்) அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், மேட்டுப்பாளையம் – அவிநாசி செல்லும் சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் உரிய வழிவகை செய்யப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு உரிய பயிற்சி கொடுத்து வங்கிகள் மூலமாக கடன் பெற்று கொடுத்து அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவேன்.

ரேஷன் கடைகள் மூலமாக 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கும் திட்டம் தொடரும். வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்படும். இவ்வாறு வேட்பாளர் எல்.முருகன் பேசினார்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்த மக்களிடையே பேசிய அவர் தெலுங்கில் பேசி வாக்குகளை சேகரித்தார். பின்னர், அங்கிருந்து 100க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் தொண்டர்கள் முன்னே செல்ல அவர் நீலகிரி மாவட்டத்திற்கு பேரணியாகவே புறப்பட்டு சென்றார்.

இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் விக்னேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், நகர தலைவர் உமாசங்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் கோத்தகிரி, குன்னூர் உள்ப பல்வேறு பகுதிகளில் இறுதிக்கட்டமாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

The post மகளிர் சுய உதவிக்குழுவுக்கு வங்கிக்கடன் தந்து தொழில் முனைவோராக மாற்றுவேன்: நீலகிரி பாஜ வேட்பாளர் எல்.முருகன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: