ஊட்டியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி

ஊட்டி:  நீலகிரியில்  கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை முதல் ஊட்டி  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று ரெட் அலார்ட்  விடுக்கப்பட்டிருந்த நிலையில்  கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.  முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட  நிர்வாகம் விடுமுறை அளித்திருந்தது.  நேற்று காலை  முதல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான முத்தோரை பாலாடா, இத்தலார்,  நஞ்சநாடு, மணிஹட்டி போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், ஊட்டியில் தாழ்வான  பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. காந்தல் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே தண்ணீர்  தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  மேலும், மார்க்கெட், கூட்ஷெட் சாலை, சேரிங்கிராஸ் போன்ற பகுதிகளிலும் மழை  நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்  பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பெரும்பாலான  இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. மேலும், விவசாய  நிலங்களும் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர,  பெரும்பாலான பகுதிகளில் கடும் மேக மூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள்  முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.

Related Stories: