கந்து வட்டி கேட்டு மிரட்டும் பெண் மீது நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

கடலூர், ஆக. 2:  கடலூர் புதுநகர் போலீஸ் நிலையம் முன்பு, நேற்று ஒருவர் தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை தன் மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் அவரிடம் இருந்து மண்ணெண்ணெயை பிடுங்கி அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த அழகர்சாமி மகன் கார்த்திக் குமார்(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கும், கடலூர் அருகே உள்ள சொரக்கால்பட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை சம்பந்தமாக, கடந்த பிப்ரவரி மாதம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். இது குறித்து போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை, நடத்தி நீதிமன்றம் மூலம் தீர்வு காண அறிவுறுத்தினர்.

 கடந்த மார்ச் மாதம் நான் திருச்சி அருகே உள்ள எனது சொந்த கிராமத்திற்கு சென்றிருந்தேன். அப்போது அந்த பெண் தனது கணவர் மற்றும் சிலருடன் வந்து என்னையும் எனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். அப்போது எனது அண்ணன் அந்த பெண்ணுக்கு தர வேண்டிய பணத்தை, தான் தருவதாக கூறி அனைவரையும் அனுப்பி வைத்தார். கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி அந்த பெண்ணிடம் எனது அண்ணன், ரூ. 5 லட்சம் ரொக்கமாகவும், ரூ. 2 லட்சத்துக்கு காசோலையாகவும் வழங்கினார்.

ஆனால் நான் அந்த பெண்ணிடம் வாங்கியது ரூ.3,75,000 மட்டுமே.  இந்நிலையில் அந்த பெண் என்னிடம் வாங்கி வைத்திருந்த என்னுடைய வங்கி காசோலை, எனது அண்ணனின் வங்கி காசோலை மற்றும் எனது அண்ணனுடைய நண்பரின் வீட்டு பத்திரத்தை தர மறுக்கிறார். இன்னும் ரூ.15 லட்சம் கொடுத்தால் மட்டுமே, அனைத்தையும் திருப்பித் தருவேன் என்று கூறுகிறார். மேலும் எங்கள் காசோலையை வைத்து செக் மோசடி வழக்கு போட்டு விடுவதாகவும் மிரட்டி வருகிறார். எனவே அந்தப் பெண்ணின் மீது கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பெண்ணின் கணவர் மற்றும் எங்களை மிரட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: