பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்பு பெண் தலைவர்கள் கள பயணம்

பெரம்பலூர்,ஜூலை 27: உள்ளாட்சி அமைப்பு பெண் தலைவர்கள் கரம்பியம், சாத்தனூர் கல்மரப் பூங்கா, அமோனைட்ஸ் மையம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட செல்லும் ஓர் நாள் கள பயணத்தை கலெக்டர் வெங்கட பிரியா, பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் காரை, கொளக்காநத்தம், கரம்பியம் மற்றும் பிலிமிசை உள்ளிட்ட பகுதிகளில் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலால் சூழப்பட்டு இருந்தபோது, கடலுக்கு அடியில் வாழ்ந்து வந்த கடல் வாழ் உயிரினங்கள், தாவரங்கள், மரங்கள் ஆகியவை காலப்போக்கில் புதையுண்டு படிமங்களாக மாறின. புவியியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது, இப்படிமங்களின் முக்கியத்துவம் குறித்து உலகிற்கு தெரிய வந்தது.

ஆலத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தனுாரில் கோனி பர்ஸ் வகையைச் சேர்ந்த (பூக்கும் வகைத் தாவரங்களே தோன்றாதகாலம்) அடி மரம் ஒன்று கல்மரமாக காட்சியளிக்கிறது. புகழ்பெற்ற புவியியலாளர் டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணன் என்பவரால் 1940ம் ஆண்டு இந்த கல்மரம் கண்டறியப்பட்டது. மேலும் பூமியில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட அம்மோனைட் தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அவற்றில் 150க்கும் மேற்பட்ட தொல்லுயிர் எச்சங்கள் நமது பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்றவை என்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

இச்சிறப்புக்குறிய பெரம்பலூர் மாவட்டத்தின் சிறப்பினை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முதற்கட்டமாக பெண் தலைவர்களுக்கான சிறப்பு ஓர் நாள் கள பயணம் நேற்று பெரம்பலூர் ஒன்றிய அலுவலகத்திலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. இந்த களப்பயணத்தில் 65 கிராம ஊராட்சி தலைவர்கள், 4 மாவட்ட கவுன்சிலர்கள், 3 பேரூராட்சி தலைவர்கள் மற்றும் நகராட்சி தலைவர் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர் பிரசாத் கள பயணத்தை ஒருங்கிணைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தின் பெருமைகளை தலைவர்கள் தெரிந்து கொண்டு அவர்களது பகுதிகளுக்கு சென்று, இதுகுறித்து எடுத்துரைப்பதற்காக இந்த களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ஊராட்சி உதவி இயக்குநர் கணபதி, ஒன்றியக்குழுத் தலைவர்கள் மீனா அண்ணாதுரை, பிரபா செல்லப்பிள்ளை, நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், இமயவரம்பன், லட்சுமி, செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: