இழப்பீடு வழங்கினால் வனப்பகுதியை விட்டு வெளியேற தயார் மேகமலை விவசாயிகள் 4 பேர் மனு

தேனி ஜூன் 14: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே, மேலப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் சேர்மலை (55). அதே ஊரைச் சேர்ந்தவர்களான பதினெட்டாம்படி மகன் முத்தையா (80), பெருமாள் மகன் சுப்பையா (58) , காளிமுத்து மகன் வாசகர் (58) ஆகியோர் நேற்று கலெக்டர் முரளீதரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பீட்டில், கடந்த 50 ஆண்டுகளாக சுமார் இரண்டு ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறோம். வனத்துறையினர் நீதிமன்ற உத்தரவின்படி வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். எங்களுக்கு வாழ்வாதாரமே இந்த நிலம் தான். வேறு விதமான எவ்வித வருமானம் ஏதுமில்லை. எனவே, அரசு மூலம் எங்களுக்கு ஏதாவது இழப்பீடு அல்லது வேறுவிதமான அரசு உதவி வழங்கினால் நாங்கள் அனுபவித்து வந்த நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தனர். மேகமலை வன பகுதிகளிலிருந்து வெளியேற மாட்டோம் என பல்வேறு அமைப்பினர்போராடி வரும் நிலையில், நான்கு விவசாயிகள் மாற்றிடம் வழங்கினால் தங்கள் நிலத்தை ஒப்படைக்க தயார் என கலெக்டரை சந்தித்து மனு அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: