மேச்சேரி அருகே நள்ளிரவு டூவீலரில் வந்து ஆடு திருடிய 2 பேர் கைது

மேச்சேரி, ஜூன் 9: மேச்சேரி அருகே நள்ளிரவு டூவீலரில் வந்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டை திருடிச்சென்ற 2 இளைஞர்களை, பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேச்சேரி அடுத்த மல்லிகுந்தம், வேங்கனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த விவசாயி சிகாமணி(70). இவர் தனது நிலத்தில் பட்டி அமைத்து 10 வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம்போல் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்கச்சென்றுள்ளார். நள்ளிரவு பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகள் சத்தம் போட்டுள்ளது. சத்தம்கேட்டு எழுந்த சிகாமணி, வெளியே வந்து பார்த்தபோது 2 இளைஞர்கள் ஒரு ஆட்டை தூக்கிக்கொண்டு டூவீலரில் சென்றனர். அதிர்ச்சியடைந்த சிகாமணி, திருடன் திருடன் என சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் இருந்தவரகள் எழுந்து வந்து, டூவீலரில் ஆடு திருடிச்சென்ற இளைஞர்களை துரத்திச்சென்று, சிறிது தூரத்தில் மடக்கிப்பிடித்தனர். பின்னர் மேச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து இளைஞர்களை ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மனோஜ்குமார்(20) மற்றும் தர்மபுரியை சேர்ந்த ராஜ்குமார்(20) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Related Stories: