பெரம்பலூர் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் திடீர் சாவு

பெரம்பலூர், ஜூன் 9: பெரம்பலூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தனியார் மருத்துவக் கல்லூரி 3ம் ஆண்டு மாணவர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் இறந்தார். தருமபுரியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அரவிந்த்(21). கரூர் மாவட்டம், அம்மாப்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சுதாகர்(21). வேலூர் மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் சரண்(20). இவர்கள் மூவரும் பெரம்பலூரிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர். இதற்காக பெரம்பலூர் ரோஜா நகரில் வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு மருத்துவக் கல்லூரிக்கு சென்று வருகின்றனர். அரவிந்த் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு படுத்தவருக்கு நேற்று (8ம் தேதி) அதிகாலை 3 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனிருந்த மாணவர் சரண் எழுப்பி கேட்டுள்ளார்.

அதற்கு அரவிந்த் தனக்கு ஒன்றுமில்லை, இயல்பாக இருப்பதாகக் கூறியதால் மீண்டும் படுத்துத் தூங்கிவிட்டனர். காலை 8.30 மணிக்கு அரவிந்தை தூங்கி எழாதிருந்ததால் நண்பர் சரண் எழுப்பியபோது மயங்கிய நிலையில் எழுந்தி ருக்காமல் இருந்துள்ளார். நாடித்துடிப்புக் குறைவாக இருந்ததால் உடனடியாக அரவிந்தை பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதால் உடன் தங்கிப் படிக்கும் மாணவர்கள் கதறி அழுதுள்ளனர். தகவலறிந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் அரவிந்த் உடலைப் பார்த்துக் கதறி அழுதுள்ளனர். பெரம்பலூர் போலீசார் மருத்துவக் கல்லூரி மாணவர் அரவிந்த் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Related Stories: