தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்ற வீடுகளில் மரக்கன்று நட வேண்டும் கலெக்டர் விசாகன் பேச்சு

திண்டுக்கல்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாநகராட்சி 32வது வார்டு ராஜலட்சுமி நகரில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். மாநகராட்சி துணைமேயர் ராஜப்பா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து கலெக்டர் பேசியதாவது: தமிழக வனப்பகுதியை 33 சதவீதம் அதிகரிக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வனப்பரப்பை அதிகரிக்க தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றனது. முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, தோட்டனூத்து இலங்கைத் தமிழர் மறுவாழ்பு முகாமில், 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலும், வனத்துறை சார்பில், மாவட்டத்தில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாநகராட்சியில் நேற்று மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. பொதுமக்களும் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள காலியிடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து, தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் ஜான்பீட்டர், மாநகராட்சி உறுப்பினர்கள் ஜோதிபாசு, காயத்ரி, நகரமைப்பு ஆய்வாளர் சந்திரா, உதவி பொறியாளர் சித்தன், நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: