திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்புத்தூர், ஜூன் 4: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் சுவாமி கோயிலில் நேற்று வைகாசி விசாகப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் வைகாசிப்பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். இதை முன்னிட்டு நேற்று காலை 5.30 மணியளவில் யாகசாலை யூஜை, பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து 6.10 மணியளவில் கொடிமரத்திற்கு பால் மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடந்தன.

பின்னர் கொடியேற்றப்பட்டு முதல் நாள் விழா துவங்கியது. இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. 2ம் திருநாள் முதல் 8ம் திருநாள் வரை சுவாமி பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 5ம் திருநாளான ஜூன்.7ல் காலை 8.30 மணியளவில் அம்மன் தவத்திற்கு எழுந்தருளுவார்.

பின்னர் 9.00 மணிமுதல் 10.15 மணிக்குள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இரவு யாணை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். 9ம் திருநாளான ஜூன் 11ல் காலை 5.10 மணிக்குமேல் 6.00 மணிக்குள் ஐம்பெரும் கடவுளர் திருத்தேருக்கு எழுந்தருளல் நடைபெறும். பின்னர் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். மாலை 4.10 மணியளவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். 10ம் திருநாளான ஜூன் 12ம் தேதி காலை 10.40 மணியளவில் திருத்தளி தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்குதல் நடைபெறும். இரவு 8.00 மணியளவில் கோயிலில் இருந்து சுவாமி தெப்ப மண்டபம் எழுந்தருவார். பின்னர் தெப்பத்திருவிழா நடைபெறும்.

Related Stories: