கூடலூர் நகராட்சியில் மழைக்காலங்களில் சேதமடைந்த பாலங்கள், சாலைகள் ஆய்வு

கூடலூர், மே 28:  கூடலூர் நகராட்சியில் கடந்த 2020 ஆண்டு பெய்த மழையால் சேதமடைந்த பாலங்கள், சாலைகளை நேற்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு செய்தார்.கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2020ம் ஆண்டு மழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முதல் மைல் கோல்டன் அவென்யூ, புறமன வயல், துப்புகுட்டி பேட்டை, மங்குழி, வேடன் வயல் உள்ளிட்ட பகுதிகளில் சிறு பாலங்கள், சாலைகள், நடைபாதைகள் சேதமடைந்தன. இது தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக, கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, துணைத் தலைவர் சிவராஜ் ஆகியோர் சென்னையில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர்  பொன்னையனை நேரில் சந்தித்து அறிக்கை அளித்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ராஜன், பொறியாளர் ஆரி ஆகியோர் நேற்று முன்தினம் கூடலூர் வந்து நகராட்சி ஆணையர் பொறுப்பு காந்திராஜ், பொறியாளர் பார்த்தசாரதி, பணி மேற்பார்வையாளர் சிவபாக்கியம் ஆகியோருடன்  துப்புகுட்டிபேட்டை, எம்ஜிஆர் நகர், முதல்மைல், வேடன்வயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த பாலங்கள், சாலைகளை ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் இப்பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான திட்ட அறிக்கையைப் பெற்று நிதி ஒதுக்கீடு செய்து விரைவாக பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

ஆய்வின்போது நகராட்சி தலைவர் பரிமளா, துணைத் தலைவர் சிவராஜ், வார்டு உறுப்பினர்கள் சத்தியராஜ் சத்தியசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: