சிவகங்கை நாலுகோட்டையில் 7 கண்மாய்களில் தூர்வாரும் பணி துவக்கம்

சிவகங்கை, மே 26: சிவகங்கை அருகே நாலுக்கோட்டையில் 7கண்மாய்களை நன்கொடையாளர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் தூர்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி பணியை துவக்கி வைத்து தெரிவித்ததாவது: தமிழக அரசு நீர்வள ஆதாரங்களை சீரமைத்து, நிலத்தடி நீரை மேம்படுத்திடும் பொருட்டு, தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாத்திட துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர்நிலைகளை பாதுகாத்திட தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளித்திட முன்வந்துள்ளனர். அதன்படி நாலுகோட்டையில் உள்ள சங்கிலித்தொடர் கண்மாய்களான பில்லாணி, பன்னியன், சிறுகுடி, தாமணி, பொட்டல்குளம், கருங்குளம், செங்குளம் ஆகிய 7கண்மாய்களை ரூ.55 லட்சத்து 34 ஆயிரத்து 847 மதிப்பில் சீரமைப்பதற்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் புதர்களை அகற்றுதல், கரைகளை பலப்படுத்துதல், மதகுகளை சரிசெய்தல்- புனரமைத்தல், கண்மாய்களை தூர்வாருதல், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அனைத்து திட்டப்பணிகளையும் செப்படம்பர், 2022க்குள்ளாக நிறைவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இப்பணிகளை கிராமமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சீரமைப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் வைத்தியநாதன், கண்ணன், கொண்டா ராதாகிருஷ்ணன், சிவகங்கை பிடிஓக்கள் அன்புச்செல்வி, ரெத்தினவேல், நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: