மூன்று மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து தனியார் தோட்ட தொழிலாளர்கள் முற்றுகை

கூடலூர், மே 26: மூன்று மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து கூடலூர் ஊட்டி சாலையில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நேற்று தோட்ட அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூர்- ஊட்டி சாலையில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், தோட்ட அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். சம்பளம் வழங்கும் வரை வேலைக்கு செல்வதில்லை என கூறி காலை முதல் மாலை வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, தோட்ட நிர்வாகத்துடன் ஏஐடியூசி தொழிற்சங்கம் மற்றும் தோட்ட தொழிலாளர் கமிட்டி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். தோட்ட நிர்வாக பொது மேலாளர் பரிதோஸ் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், செயலாளர் முகமது கனி அலுவலக செயலாளர் ராஜு, கமிட்டி உறுப்பினர்கள் உசைன், டேவிட், பார்வதி, உன்னி, சித்தராஜ், வாப்புட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் சம்பளம் வழங்கவில்லை என கூறிய தொழிலாளர்கள் பிப்ரவரி மாத சம்பளத்தை உடனடியாக வழங்கினால் தான் வேலைக்கு செல்வோம் என தெரிவித்தனர். மாலை 4 மணி வரை நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் தொழிலாளர்களுக்கு பிப்ரவரி மாதம் வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் நிலுவையில் உள்ள ஒரு வார கூலியை நேற்று மாலை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து வழங்க வேண்டிய சம்பள பாக்கி மற்றும் இதர பணப்பயன்களை வழங்குவதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: