ரயில் பாதைகளில் யானைகள் சென்சார் கேமராக்கள் அமைக்க திட்டம்

கோவை, மே 26: கோவை வனகோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய வனச்சரகங்களில் 550க்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன. கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து செல்லும் காட்டு யானைகளுக்கு கோவை கோட்ட வனப்பகுதி வலசைபாதையாக இருக்கிறது.  இடம் பெயர்ந்து வரும் யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வந்து குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இதைத்தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுக்கரையில் இருந்து பாலக்காட்டிற்கு செல்லும் ரயில் பாதையில் யானைகள் நடமாட்டம் இருக்கிறது. கடந்த 10 ஆண்டில் இந்த ரயில் பாதையில் 13 யானைகள் ரயில் மோதி இறந்து விட்டன.  யானைகள் எளிதாக தண்டவாளத்தை கடந்து செல்ல வனத்துறை சார்பில் வசதிகள் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்கள் 45 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து கோவை வனத்துறையினர் கூறுகையில், ‘‘மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதி வழியாக போடப்பட்டு உள்ள தண்டவாளத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகிறது. இரவு நேரத்தில் வனப்பகுதியைவிட்டு வெளியே வரும் காட்டு யானைகள் தண்டவாளத்தை எளிதாக கடந்து செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது. இரவில் காட்டு யானைகள் நிற்பதை ரயில் என்ஜின் டிரைவர் தெரிந்து கொள்ள வசதியாக சூரிய ஒளியிலான விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இதுதவிர இந்த பகுதியில் தெர்மல் சென்சார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் காட்டு யானைகளை துல்லியமாக கண்காணிக்க முடியும். 24 மணி நேரமும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கேமராக்களை கண்காணித்து வருவார்கள். காட்டு யானைகள் தண்டவாளம் அருகே நிற்பது தெரியவந்தால் உடனடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் அந்த யானைகளை அங்கிருந்து துரத்துவார்கள். அதுபோன்று ரெயில்வே நிர்வாகத்துக்கும் குறிப்பிட்ட இடத்தில் யானைகள் நிற்கும் தகவல் தெரிவிக்கப்படுவதால் அந்த பகுதியில் குறைவான வேகத்தில் ரெயில் இயக்கப்படும். விபத்து தவிர்க்கப்படும். டிரோன் மூலமாகவும் யானைகள் நடமாட்டம் கண்டறியப்படும்’’ என்றார்.

Related Stories: