பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்

சேத்தியாத்தோப்பு, மே 24:     

சேத்தியாத்தோப்பு அருகே பெரியகுப்பம் கிராமத்தில் ஆற்று பகுதியை மறைத்து நான்கு வழி சாலை அமைக்கப்படுவதாக குற்றம்சாட்டி, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பெரியகுப்பம் கிராமத்தின் வழியாக விக்கிரவாண்டி- தஞ்சை நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இது அருகிலுள்ள வெள்ளாற்று பகுதியை கடந்து செல்கிறது. வெள்ளாற்றில் மழை வெள்ளக் காலங்களில் மூன்று ஆறுகளின் தண்ணீர் வடிகாலாக செல்கிறது.     

 கட்டுக்கடங்காமல் செல்லும், ஆற்று வெள்ளம் கடந்த காலங்களில் கிராமத்திற்குள்ளும், வயல்களிலும் புகுந்து கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது ஆற்றுப் பகுதியை மறைத்து பாலம் கட்டப்படுகிறது. இதனால் தங்களது கிராமம் மற்றும் இந்த ஆற்றை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக இப்போது ஆற்றில் பாலம்கட்டுவதால் ஆற்றில் இயல்பாக தண்ணீர் செல்வதில் தடை ஏற்படும். அந்த தண்ணீர் தாழ்வான கிராம பகுதியினுள் நுழைந்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.   அதனால் தற்போது பாலம் கட்டுவதை நீட்டித்து கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமும் முறையிட்டும் அவர்கள் இதனை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே பாலத்தை நீட்டிக்காமல் சாலை போட கூடாது என்றனர். ேமலும், அப்போது மண் கொட்டிய பகுதியில் டிராக்டரை வைத்து உழுது தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து, இன்று கிராம பொதுமக்களிடம் நகாய் திட்ட அதிகாரிகள் கலந்தாய்வு நடத்த உள்ளனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.    

Related Stories: