தற்கொலை செய்வதற்கு முன் வீடியோ பதிவிட்டு தூக்கில் தொங்கிய வாலிபர்

உளுந்தூர்பேட்டை, மே 14:  வீடியோ பதிவிட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வரும் 25ம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (32). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அவரது பெற்றோர் சவுந்தர்ராஜனுக்கு மணப்பெண் பார்த்து திருமணத்துக்கு நிச்சயம் செய்தனர். வரும் 25ம் தேதி திருமணத்துக்கு தேதி குறிக்கப்பட்டு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது தந்தை ராஜேந்திரன் (59) கோவை வந்தார். தனது மகனுடன் சேர்ந்து அவரது நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் சவுந்தர்ராஜனின் அண்ணன் சிவக்குமார் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், சவுந்ததர் ராஜன் அழைப்பை ஏற்கவில்லை. இதனால், சவுந்ததர்ராஜனின் நண்பர்களை தொடர்பு கொண்டு பீளமேடு டீச்சர்ஸ் காலனியில் உள்ள அவரது அறைக்கு சென்று பார்த்து வர சொல்லியுள்ளார். அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, சவுந்தர்ராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இத்தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சவுந்தர்ராஜன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது அறையில் இருந்த அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அதில் சவுந்தர்ராஜன் தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது செல்போனில்தான் பேசுவதுபோல் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அதில், ‘எனக்கு கடன் பிரச்னை ஏதுமில்லை. வாழப் பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது உடலை நல்லபடியாக அடக்கம் செய்து கொள்ளுங்கள்’ என வாக்குமூலமாக பதிவு செய்து செல்போனில் வைத்துள்ளார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: