ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஏப்.28: ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துமாரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். மாநில மகளிரணி செயலாளர் செந்தாமரை, மாநில இணை செயலாளர் ஜெயபாரதன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிசந்திரன் முன்னிலை வகித்தனர்.மாநில துணைத்தலைவர் நாகேந்திரன், மாநில பொருளாளர் ரவி ஆகியோர் பேசினர். கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய ஊதிய உயர்வு அரசாணை வெளியிட வேண்டும்.தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான மாத ஊதியம் பெறும் வகையில் ஊதியத்தை நிர்ணயித்து இயக்குநரகத்தில் இருந்து தனி சுற்றறிக்கை அனுப்பிட வேண்டும். இவ்வகை பணியாளர்களின் 30 ஆண்டு கால பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்.ஊராட்சி செயலாளர்களின் ஊதியத்தை அரசு கருவூலம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களை காலமுறை ஊதிய வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் உள்பட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Related Stories: