வெலிங்டன் கன்ட்டோன்மென்ட் மலையப்பன் காட்டேஜ் கிராமத்தில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்

குன்னூர், ஏப்.28: வெலிங்டன் கன்ட்டோன்மென்ட் பகுதியில் மலையப்பன் காட்டேஜ் பகுதியை வருவாய் துறையினர் காலி செய்ய நோட்டீஸ் வழங்கியுள்ளதால் கிராம மக்கள் கலக்கத்தில் உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.வெலிங்டன் கன்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட மலையப்பன் காட்டேஜ் பக்கமுள்ள நிலத்தில் சுமார் 26 குடும்பத்தினர் வீடு கட்டி 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். அரசிற்கு செலுத்தக்கூடிய வீட்டு வரி, மின்சார வரி, உள்ளிட்டவற்றை உரிய காலத்தில் வருவாய்த்துறையின் மூலம் அரசு செலுத்திவந்தனர்.இந்நிலையில், கடந்த  21‌ம் தேதி அந்த இடம் ஓடை புறம்போக்கு என்று கூறி இடத்தை காலி செய்ய வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கியது. இதனால், கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகிறார்கள். வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பெரும் சிரமத்தில் உள்ளனர். குழந்தை படிப்பு,  முதியோர் பராமரிப்பு உள்ளிட்டவைகளை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கலக்கத்தில் உள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் இது குறித்து கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில், 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த இந்த இடத்திலே வாழ வகை செய்ய வேண்டும். எங்கள் இடமானது ஓடைக்கும், வீட்டிற்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் மிகவும் தொலைவாக உள்ளது. எனவே,  மீண்டும் ஒருமுறை அளவீடு செய்ய வேண்டும் என கூறி உள்ளனர்.

Related Stories: