மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஏப். 25:   புதுவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு  தெரிவித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்புக்கொடி  ஆர்ப்பாட்டம் நடந்தது. கருப்புக்கொடிகளை போலீசார்  பறிமுதல் செய்தபோது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழை பழித்து இந்தியை  திணிக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  வகையில் அமித்ஷாவே திரும்பி போ என்ற முழக்கத்தோடு மதச்சார்பற்ற முற்போக்கு  கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நேற்று சாரம் அவ்வை  திடலில் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சிபிஐ மாநில செயலாளர் சலீம் தலைமை  தாங்கினார். காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள்  முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள்  கமலக்கண்ணன், விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், சிபிஎம் பிரதேச  செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநில குழு உறுப்பினர் பெருமாள், விசிக முதன்மை  செயலாளர் தேவ.பொழிலன், சிபிஐ (எம்-எல்) செயலாளர் சோ.பாலசுப்பிரமணியன்,  சிபிஐ தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, துணை செயலாளர்அபிஷேகம்,  கீதநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேதுசெல்வம், சுப்பையா, சரளா  மற்றும் விசிக, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  கட்சியினர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அமித்ஷாவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியுடன் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டவர்களிடம் இருந்து கருப்புக் கொடிகளை பறித்தனர். இதனால்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு  ஏற்பட்டு கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு  ஏற்பட்டது. நாராயணசாமி புகார்:  புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவே திரும்பி போ என்ற கோஷத்துடன் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், தேஜ கூட்டணி ஆட்சிக்கு வந்து கடந்த ஓராண்டு காலம் ஆகிறது. ஆனால், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களுக்கு வேதனைதான் மிஞ்சுகிறது. மத்திய அரசிடமிருந்தும் நிதி கிடைக்கவில்லை. புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கொடுப்போம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

மாநில கடன் ரூ.8,500 கோடியை ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். எதையும் செய்யவில்லை. மத்தியில் இருந்து நாங்கள் கொண்டு வந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குமரகுருப்பள்ளம் பகுதியில் அடுக்குமாடி வீடு கட்டும் திட்டத்தை செய்கிறார்கள். மோடி அரசு புதுச்சேரி வளர்ச்சிக்காக புதிதாக எதுவும் கொடுக்கவில்லை. முதல்வர் ரங்கசாமியை கைப்பாவையாக வைத்து கொண்டு பினாமி ஆட்சி நடத்துகிறார்கள். துணைநிலை ஆளுநர் சூப்பர் முதல்வராக செயல்படுகிறார்.  அமித்ஷா புதுவைக்கு வருவதால் என்ன பயன்? எனவேதான் அவர் திரும்பி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம், என்றார்.

Related Stories: