வேலை செய்த டிரைவருக்கு பணி ஆணை, இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி: நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணிமனையில் வேலை செய்த டிரைவருக்கு மீண்டும் பணி மற்றும் இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுபடி, அவர் வேலை செய்த பஸ் ஜப்தி செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்  காஞ்சிபுரம் கோட்டம் காஞ்சிபுரம் பணிமனையில் டிரைவராக வேலை செய்தவர் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஐயப்பன் நகரை சேர்ந்த சுப்பிரமணியன்.

கடந்த 1994ம் ஆண்டு டிரைவராக பணியில் சேர்ந்த சுப்பிரமணியம், காஞ்சிபுரம் -தாம்பரம் வழித்தடத்தில் வேலை செய்தார். 2013ம் ஆண்டு பஸ் முன்பு ஏற்பட்ட வாகன விபத்து காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

நீதிமன்றத்தில் டிரைவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர் நிரபராதி என 2018ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து சுப்பிரமணி, தனக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்க கோரி, நீதிமன்ற ஆணையை காஞ்சிபுரம் பணிமனை இயக்குனர் மற்றும் மேலாளரிடம் வழங்கியுள்ளார்.

ஆனால், போக்குவரத்து கழக நிர்வாகம், செவி சாய்க்கவில்லை. இதனால் அவர், மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி 5 ஆண்டுகளாக பணி வழங்காததை கண்டித்து, டிரைவர் சுப்பிரமணிக்கு இழப்பீடாக ரூ. 19 லட்சத்து 66 ஆயிரத்து 354, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் விழுப்புரம் லிமிடெட் பணிமனை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆனால், பணிமனை அலுவலர்கள் குறித்த காலத்தில் இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை. இதனால், அவர் பணி செய்த பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், நீதிமன்ற ஊழியர்கள் மூலம்  சம்பந்தப்பட்ட பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.

Related Stories: