ஊட்டியில் பிளாஸ்டிக் தடையால் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை

ஊட்டி, ஏப்.22: ஊட்டியில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றாக ஒரு லிட்டர் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனைக்கு வந்துள்ளது. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகு மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஒரு லிட்டர் மற்றும் அதற்கும் குறைவான பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் வாட்டர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் அல்லாத ஸ்டீல் பாட்டில்களை பயன்படுத்தி தண்ணீர் பிடித்து பயன்படுத்தி கொள்ளவும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மக்கும் பொருட்களில் செய்யப்பட்ட கப்புகள், வாழை மட்டையில் செய்யப்பட்ட தட்டுக்கள் போன்றவற்றை பயன்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் பிளாஸ்டிக் முழுமையாக ஒழிந்தபாடில்லை.

குறிப்பாக, அரசு பஸ்களில் வரும் பயணிகள், சுற்றுலா வருபவர்களால் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் நீலகிரிக்குள் வருகின்றன. இவை ஆங்காங்கே வனப்பகுதிகளில் தூக்கி எறியப்பட்ட நிலையில் கிடக்கின்றன. இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, ஊட்டி நகரில் உள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் கண்ணாடி பாட்டில்களுக்கு மாற துவங்கியுள்ளன.

சில தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் கண்ணாடி குடிநீர் பாட்டில்களை ஊட்டியில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. இதற்கு ரூ.60 செலுத்தி கண்ணாடி குடிநீர் பாட்டில்களை வாங்கி செல்பவர்கள் மீண்டும் காலி பாட்டிலை ஒப்படைத்தால் ரூ.30 திருப்பி தரும் அடிப்படையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. இவற்றை பெரும்பாலான வணிக நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்த துவங்கி உள்ளன.

Related Stories: