அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட கலெக்டர்

ஊட்டி, ஏப். 20:  கூடலூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

கூடலூர்  அருகேயுள்ள கார்குடி பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட  மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் திடீர்  ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, பள்ளி மாணவ,  மாணவிகளுடன் கல்வி  கற்பதின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.

மேலும், வருகை பதிவேட்டினை பார்வையிட்டார். வகுப்பறை,  கணினி அறை, சமயலறை, உணவு இருப்பு வைக்கும் அறை போன்ற அறைகளில் ஆய்வு  மேற்கொண்டார்.

பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதையும், மாணவ,  மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் அட்டவணைப்படி வழங்கப்படுகிறதா? என  உறுதி செய்தார். தொடர்ந்து, மாணவ,  மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம், கூடலூர் வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் மோகன்குமார் மங்களம், ஸ்ரீதரன், பள்ளி விடுதி காப்பாளர் உட்பட  அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: