நீடாமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைத்த 18 பட்டுப்புடவைகள் பறிமுதல்

நீடாமங்கலம், பிப்.18: நீடாமங்கலம் பேரூராட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்த 18 பட்டுப்புடவைகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் நாளை (19ம் தேதி) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடை பெறுகிறது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறதா என பறக்கும் படையினர் பல்வேறு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நீடாமங்கலம் புதுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பட்டுப்புடவைகள் பதுக்கி விநியோகிப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பறக்கும்படை அதிகாரி மற்றும் துணை தாசில்தார் (தேர்தல்) மகேஷ், சிறப்பு சப் இன்ஸ் பெக்டர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கீழத்தெருவில் உள்ள செல்லக்குட்டி (55) என்பவரது வீட்டில் சோதனை செய்ததில் 18 பட்டுப்புடவைகள் இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து நீடாமங்கலம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜசேகரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: