(வேலூர்) பெயர்கள் வேறு வார்டுகளில் உள்ளதால் குழப்பத்தில் வாக்காளர்கள் ஒரே கட்டிடத்தில் இருந்த 2 பூத்துகள் மாற்றியமைப்பு தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில்

அணைக்கட்டு, பிப்.17: தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் பெயர்கள் வேறு வார்டுகளில் உள்ளதால் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும், ஒரே கட்டிடத்தில் இருந்த இரண்டு பூத்துகள் மாற்றியமைக்கப்பட்டது. பென்னாத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டு கவுன்சிலரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை மறுதினம் நடக்கிறது. வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய வாக்குச்சாவடி சீட்டுகள் அந்த பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடுகள் தேடி சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த பலருக்கு வாக்குச்சாவடி சீட்டுகள் வராததால், அவர்கள் பூத் சீலிப் வழங்குபவர்களிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். பென்னாத்தூர் பேரூராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேல் வார்டுகள் மாற்றப்படாமல் இருந்ததால் வார்டுகள் மாற்றியமைக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட குளறுபடியால் 1வது வார்டில் உள்ள வாக்காளர்கள் கடைசி வார்டான 15வது வார்டிலும், 15ல் உள்ளவர்கள் 1வது வார்டிலும், அதேபோல் மற்ற வார்டுகளில் வாக்காளர்கள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.

இதில் ஒரே வாக்காளரின் பெயர்கள் இரண்டு வார்டுகளில் வருவதால், வாக்காளர்களும், வேட்பாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். மேலும், வார்டுகள் மாற்றப்பட்டும் வாக்காளர்கள் பெயர்கள் சரிவர மாற்றப்படாததால் அவர்கள் எந்த வாக்குச்சாவடியில் யாருக்கு வாக்களிப்பது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். மேலும் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் தெரியாமல் தவித்து வருகின்றனர். மேலும், வாக்குச்சாவடிகளாக இருந்த பள்ளி கட்டிடங்கள் சில இடிக்கப்பட்டதால் ஒரே பள்ளி கட்டிடத்தில் இரண்டு வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதால், வாக்காளர்கள் நிற்க போதிய இட வசதியில்லாத நிலை ஏற்படும் என மண்டல அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அர்ச்சுனன் மற்றும் அலுவலர்கள் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 15 வாக்குச்சாவடிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். அப்போது கேசவபுரம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒரே கட்டிடத்தில், இரண்டு பூத்துகள் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வார்டு எண் 1க்கு அதே பூத்தும், வார்டு எண் இரண்டுக்கு பக்கத்தில் உள்ள வேறு கட்டிடத்தில் மற்றொரு பூத்தும் மாற்றியமைக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறுகையில், ‘வாக்காளர்கள் எந்த வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதோ அந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு சீட்டை காண்பித்து வாக்களிக்கலாம். மேலும், பூத் சிலிப் இல்லாமல், பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தால் அரசு நிர்ணயித்துள்ள ஏதாவது ஒரு ஆவணத்தை காண்பித்து வாக்களிக்கலாம். ஒரே கட்டிடத்தில் இருந்த இரு வாக்குச்சாவடிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனவே வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கலாம்’ என்றனர்.

Related Stories: