மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணி

மன்னார்குடி, ஜன.29: நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 62,988 பேர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 25 இடங்களில் 67 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலராக நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக வலங்கைமான் பாலசுப்ரமணியன், கோட்டூர் நமச்சிவாயம், மன்னார்குடி ஜெய பாஸ்கர், அம்மையப்பன் சரவணன், கூத்தாநல்லூர் குலோத்துங்கன் ஆகிய 5 பேர்களையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான காயத்ரிகிருஷ்ணன் அறிவித்துள்ளார். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகளை தடுக்கும் வகை யில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகர்ப்புற தேர் தல் அட்டவணை வெளியான உடனேயே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மன்னார்குடியில் சந்திரசேகரன், தரன், நக்கீரன் ஆகிய மூன்று அதிகாரிகளின் தலைமையில் தலா 4 பேர் கொண்ட 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், பறக்கும் படையினர் சுழற்சி முறைகளில் பணியாற்றி வருவதாகவும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்கு தகுந்த ஆவணங்களை பறக்கும் படையினரிடம் கட்டாயம் காட்ட வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் சென்னுகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பறக்கும் படையினர் நேற்று முதல் நகராட்சிக்குட்பட்ட நெடுவாக்கோட்டை, ருக்குமணிப்பாளையம், தேரடி, மேலப்பாலம், கீழப்பாலம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: