திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று ெதாடக்கம் விதிமீறல்களை கண்காணிக்க 42 பறக்கும் படைகள்

திருவண்ணாமலை, ஜன.28: திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 42 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை 22ம் தேதி நடைபெறுகிறது. எனவே, தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. அரசியல் கட்சியினரும் தேர்தல் களத்தில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அதையொட்டி திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய நகராட்சி அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பெற உள்ளனர்.

அதேபோல், செங்கம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், போளூர், கண்ணமங்கலம், களம்பூர், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், தேசூர் ஆகிய பேரூராட்சி அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான செயல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பெற உள்ளனர்.

அதையொட்டி, வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ள 14 இடங்களிலும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர் மற்றும் உடன் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், மனுதாக்கல் செய்ய ஊர்வலமாக வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடுவோர் ₹2 ஆயிரமும், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவோர் ₹ஆயிரமும் டெபாசிட் செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி வகுப்பினர் டெபாசிட் தொகையில் 50 சதவீதம் செலுத்தினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெபாசிட் தொகையை ரொக்கமாக அல்லது கருவூலத்தில் செலுத்தியதற்கான ரசீது இணைக்க வேண்டும்.

இந்நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும், விதிமீறல்களை தடுக்கவும் 42 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் போலீசார் பறக்கும் படை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சிக்கும், பேரூராட்சிக்கும் தலா 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 8 மணி நேரம் சுழற்சி முறையில் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால், திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் பொது இடங்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை நகராட்சி ஊழியர்கள் அழித்து வருகின்றனர். மேலும், சுவர் விளம்பரங்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும், விதிமீறி எழுதினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: