உப்பு நீர் வெளியேற்றப்படுவதாக புகார் உடன்குடி அனல்மின் நிலையத்தில் யூனியன் சேர்மன் பாலசிங் ஆய்வு

உடன்குடி, ஜன. 28: உடன்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் உப்பு நீர்  தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதாக எழுந்த புகாரையடுத்து அனல் மின் நிலைய வளாக அதிகாரிகளுடன் யூனியன் சேர்மன் பாலசிங் ஆய்வு  மேற்கொண்டு, ஆலோசனை நடத்தினார்.  உடன்குடி கல்லாமொழி பகுதியில் பல  ஏக்கர் பரப்பளவில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடல்  மட்டத்தை விட தாழ்வான பகுதியாக இருப்பதால், நீர்ப்பிடிப்பு பகுதியாகவும்  இருந்ததால் உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து  குளங்கள் தூர்வாரப்பட்டு அங்கிருந்து மணல்களை  கொண்டு உயரப்படுத்தும் பணி  நடந்து வந்தது.  

இந்நிலையில் அனல் மின்நிலைய கட்டுமானப் பணிகள்,  சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் என அனைத்து பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீர் அனல் மின் நிலைய  வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் போது அதனுடன் கடல் நீரும் சேர்ந்து  வெளியேற்றப்பட்டு வருவதாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி  வந்தனர். மேலும் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து மறுகால் பாயும் நீர்  அனல்மின் நிலைய வளாகத்தையொட்டி செல்லும் வாய்க்கால் மூலம்  குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தை வந்தடையும்.

தற்போது சுற்றுச்சுவரையொட்டி வரும் கால்வாயில் அனல்மின் நிலைய வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும்  உப்புநீர் கால்வாயில் கலந்து வருவதால் குளத்திலுள்ள நீர் மாசடைந்து வருவதாக மக்கள் மத்தியில் கடும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங்  தலைமையில் அனல் மின் நிலைய வளாக பொறியாளர் நவசக்தி, பெல் நிறுவன கூடுதல்  பொது மேலாளர்கள் காசிராஜன், ஏகே சிங் ஆகியோருடன் பார்வையிட்டு ஆய்வு நடத்தியதோடு அதிகாரிகளுடன் தீவிர  ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுமக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எவ்வித பாதிப்பும்,  குற்றச்சாட்டும் ஏற்படாத வண்ணம் தகுந்த நடவடிக்கை ஆய்வுகள் நடத்தி பணிகள்  மேற்கொள்ளப்படும் என அனல்மின் நிலைய வளாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Related Stories: