18 வயது நிரம்பிய அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவுசெய்ய வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

நாகர்கோவில், ஜன.26:  குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 12வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு வாக்காளர் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டும், “My Stamp” என்ற புதிய அஞ்சல் வில்லையினை வெளியிட்டும் பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25ம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வாக்கு உரிமை பெற்ற மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் தேர்தலில் தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக தங்களது உரிமையை நிலைநாட்ட தேர்தல் வழிவகை செய்கிறது.அதற்கு வாக்காளர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். எனவே, தாங்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 குமரி மாவட்டத்தை பொறுத்தவரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, இங்கே இருக்கக்கூடிய 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை கண்டறிய National Voters Service Portal என்ற இணையதளத்திலும், Voter Helpline App (செயலி) மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் வாயிலாக உங்களது பெயர், வயது, தந்தையின் பெயர், எந்த மாநிலம் என்பதை குறிப்பிட்டு பார்க்கும்போது, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். குமரி மாவட்டத்திற்குட்பட்ட, 18 முதல் 19 வயது வரையுள்ள 12 ஆயிரத்து 932 இளம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் இணையதளம் வாயிலாகவும் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அனைவரும் விண்ணப்ப படிவங்களை மாவட்ட, வட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட மையங்களுக்கு சென்று, படிவம் 6-ஐ பெற்று, விண்ணப்பிக்கலாம். வாக்களிப்பது என்பது நமது உரிமை, ஜனநாயக கடமை ஆகும். எனவே, அனைவரும் உங்களது ஜனநாயக உரிமையினை தவிர்காமல், கட்டாயம் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அரவிந்த் 12-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையினை வழங்கினார். மேலும், சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும், மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ்குமார், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், தேர்தல் தாசில்தார் சுசீலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: