உலக நாடுகளில் சர்வாதிகார, ஒற்றை ஆட்சிகள் உள்ள நிலையில் இந்தியா தலைசிறந்த மக்களாட்சி தத்துவத்தை கொண்டது தேசிய வாக்காளர் தின விழாவில் கலெக்டர் பேச்சு

வேலூர், ஜன.26: உலக நாடுகளில் சர்வாதிகார, ஒற்றை ஆட்சிகள் உள்ள நிலையில் இந்தியா தலை சிறந்த மக்களாட்சி தத்துவத்தை கொண்டுள்ளது என்று தேசிய வாக்காளர் தினவிழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.

12வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். டிஆர்ஓ ராமமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) விஜயராகவன், கமிஷனர் அசோக்குமார், சப்-கலெக்டர்(பயிற்சி) ஐஸ்வர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு தாசில்தார் சச்சிதானந்தம் வரவேற்றார். இதில் மூத்த வாக்காளர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.

முன்னதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி இளம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டையும், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தை வழங்கி பேசியதாவது: நமக்கு நாமே அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளதுதான் மக்களாட்சி. 1952ம் ஆண்டு முதல், நாட்டில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. அப்போது வாக்குகளை எண்ண 2 அல்லது 3 நாட்களாகும். 1996ம் ஆண்டுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு முறை பயன்படுத்துகிறோம். தற்போது ஒரே நாளில் இறுதி முடிவுகள் அறிந்து கொள்ள முடிகிறது. அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 12வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டை சிறந்த தேசமாக மாற்ற இளம் வாக்காளர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் சர்வாதிகார ஆட்சி, ஒற்றை ஆட்சி என பல்வேறு ஆட்சி முறை நடந்து வருகிறது. ஆனால் இந்தியா தலைசிறந்த மக்களாட்சி தத்துவத்தை கொண்டுள்ளது. இளம் வாக்காளர்களான உங்களுக்கு ஆயுட்காலம் முழுவதும் அரசை தேர்வு செய்யும் பொறுப்பு உள்ளது. நம்நாட்டில் 3 நீதிகள் உள்ளது. அவை சமூகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி. அனைவரும் இந்த 3 நீதிகளை கட்டாயம் பின்பற்றவேண்டும். கருத்து சுதந்திரமும் உண்டு. அனைவரும் இந்த உரிமையை பின்பற்றவேண்டும். இவைகள் நாட்டின் மக்களாட்சி தத்துவத்தை நிலை நிறுத்துகிறது. இவ்வாறு அவர் ேபசினார்.

இதில், முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வேலூர் ஆர்டிஓ விஷ்ணுபிரியா நன்றி கூறினார். கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தாசில்தார் சரண்யா தலைமை தாங்கினார். இதில், இந்திய குடிமக்களாகிய நாங்கள் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு நம் நாட்டில் ஜனநாயக மரபுகளை செயல்படுத்துவோம் என உறுதிமொழி ஏற்று கொண்டனர். அப்போது, மண்டல துணை தாசில்தார் பலராமன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமேஷ், தலைமை துணை தாசில்தார் தனலட்சுமி, தேர்தல் துணை தாசில்தார் வட்சலா, தாலுகா சர்வேயர் குபேரன்ஷா, உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல், ஒடுகத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் முனுசாமி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் நேற்று வாக்காளர் உறுதிமொழி எடுத்தனர்.

Related Stories: