கொரோனா சிகிச்சை மையங்களுக்கு தொற்றாளர்களை அழைத்து செல்ல 17 வாகனங்கள் ஏற்பாடு

நாமக்கல், ஜன.21: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதித்த நபர்களை சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்ல 17 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்த நபர்களை அவரவர் பகுதிகளில் இருந்து கொரோனா கவனிப்பு மையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியாக 2 வாகனங்கள் மருத்துவக்கல்லூரி பயன்பாட்டுக்கும், 2 வாகனங்கள் அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்கும், 13 வாகனங்கள் அனைத்து வட்டாரங்களில் இருந்து நோயாளிகளை அழைத்துவரவும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 17 சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் பொது போக்குவரத்து மூலம் பயணம் செய்யகூடாது. அவர்கள் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு செல்லும்போது தனி வாகனத்தின் மூலமே செல்ல வேண்டும். இதற்காக பொதுமக்கள் பயனடையும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 17 சிறப்பு வாகனங்கள் மூலம் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனத்தின் மூலம் அழைத்து வரும் நோயாளிகள் கொரோனா கவனிப்பு மையத்திற்கு அல்லது அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். எனவே, கொரோனா பாதித்தவர்கள் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் வழிகாட்டுதலின்படி இந்த வாகன சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசின் கொரோனா பாதுகாப்பின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு 39 வாரங்கள் முடிந்த சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊக்குவிப்பு தடுப்பூசி முகாம் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நடைபெறும். இதில், தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குநர் நலப்பணிகள் ராஜ்மோகன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: