இயற்கையை பாதுகாக்க இளைஞர் சைக்கிள் பயணம்

திருப்புவனம், ஜன.19: மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளைஞர் நாடு முழுவதும் இயற்கையை காப்போம் என்ற கோஷத்துடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆறு, ஏரி, குளம், கண்மாய், கடல் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் பொதுமக்களால் நாளுக்கு நாள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சீர்கெட்டு மாசடைந்து வருகிறது. பொதுமக்கள் மனது வைத்தால்தான் இயற்கையை காப்பாற்ற முடியும் என்ற கோஷத்துடன் மேற்கு வங்காளம் முர்சிதபாத் பகுதியைச் சேர்ந்த ஜோஜோகுமார்(28) என்ற கல்லூரி மாணவர் சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய சைக்கிள் பயணத்தில் ஜார்க்கண்ட், இமாச்சல்பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் நேற்று திருப்புவனம் வழியாக ராமேஸ்வரம் சென்றார். வழிநெடுகிலும் பொதுமக்களிடம் இயற்கையை காப்பாற்றவும், ரத்ததானம் செய்யவும் வலியுறுத்தி வருகிறார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயற்கையை காப்பாற்ற வேண்டும். ரத்ததானம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறார். நாள் ஒன்றுக்கு 100 கி.மீ தூரம் வரை பயணம் செய்கிறார். அதிகாலை ஆறு மணிக்கு தொடங்கும் பயணம் 11 மணிக்கு முடிவடைகிறது. அதன்பின் மதியம் 3 மணிக்கு தொடங்கி 7 மணி வரை பயணம் செய்கிறார். செல்லும் வழியில் கிடைக்கும் உணவுகளை பயன்படுத்தி கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் தங்கி மீண்டும் தனது பயணத்தை தொடரும் குமார், நேற்று  இரவு ராமேஸ்வரம் சென்றார். மீண்டும் ராமநாதபுரம் வந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: