கடை உரிமையாளரிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

ஊட்டி, ஜன. 19: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவும் உள்ளது. இதனையும் மீறி சிலர் இங்குள்ள கடைகளில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கு பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது ஊட்டி நகராட்சி அதிகாரிகள் நகரில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வது மட்டுமின்றி, அந்த கடைகளுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று நகர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் சுகாதார ஆய்வாளர் வைரம் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கமர்சியல் சாலையில் உள்ள சில கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 5 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அவர்கள், அந்த கடைக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர். மேலும், தொடர்ந்து இது போன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். மேலும், ஹெலிபங்க் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல், குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்காமல், லாரிகள் மூலம் கொண்டு சென்று பொது இடத்தில் கொட்டியதற்காக, அவர்களுக்கும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: