அந்தியோதயா திட்டத்தில் இருந்து 7610 குடும்ப அட்டைகள் நீக்கம்

ஊட்டி, ஜன.8: நீலகிரி மாவட்டத்தில் 7610 குடும்ப அட்டைதாரர்கள் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 6 வட்டங்களில் 298 முழு ரேஷன் கடைகள், 105 பகுதி நேர கடைகள், 33 நடமாடும் ரேஷன் கடைகள் என மொத்தம் 403 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 500 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதுமட்டுமின்றி மாவட்டத்தில் 6 வட்டங்களிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் 6 கிடங்குகள் உள்ளன.

அதன் மொத்த கொள்ளளவு 11,310 மெட்ரிக் டன் ஆகும். அந்தியோதயா அன்ன யோஜனா (35 கிலோ இலவச அரிசி திட்டம்) ரேஷன் அட்டைகளை தணிக்கை செய்ததில், மொத்தம் உள்ள 16 ஆயிரத்து 624 அட்டைகளில் 7 ஆயிரத்து 610 அட்டைதாரர்கள் பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் உள்ளனர்.

அவர்களை திட்டத்தில் இருந்து நீக்கம் செய்து முன்னுரிமை இல்லாத ரேஷன் அட்டை வகைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 403 ரேஷன் கடைகள் உள்ளன.

அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 624 அட்டைகள் இத்திட்டத்தில் உள்ளது. இதில், பொருளாதார ரீதியாக மேம்பட்ட நிலையில் உள்ள 7 ஆயிரத்து 610 குடும்ப அட்டைகள் ஏஏஒய்., திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு முன்னுரிமை இல்லாத அட்டைக்கு வகை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசிய பொருட்கள் பெறாத குடும்ப அட்டைகளை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’’ என்றனர்.

Related Stories: