நீலகிரியில் 260 முகாம்களில் இன்று தடுப்பூசி சிறப்பு முகாம்

ஊட்டி, ஜன.8:  நீலகிரி மாவட்டத்தில் இன்று 240 சிறப்பு முகாம்களும், 20 நடமாடும் முகாம்கள் என 260 முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 8ம் தேதி (இன்று) மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில், 240 நிலையான கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் 20 நடமாடும் முகாம் என 260 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் செயல்படும்.

இந்த முகாமில் 1 தடுப்பூசி செலுத்துவர் (கிராம சுகாதார செவிலியர், செவிலியர்), ஒரு தரவு பதிவாளர், 2 அங்கன்வடி பணியாளர்கள் (பயனாளிகளை அழைத்துவர) என மொத்தம் 4 பணியாளர்கள் ஒரு முகாமில் பணியில் இருப்பார்கள். மொத்தமாக 260 முகாம்களுக்கு 1040 பணியாளர்கள் பணியில் ஈடுபடுவர். இதில், முதல், 2ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் 18 வயதிக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். குறிப்பாக, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய சம்மந்தமாக நோயுள்ளவர்கள், நுரையீரல் சம்மந்தமான நோயுள்ளவர்கள், கல்லீரல் சம்மந்தமான நோயுள்ளவர்கள், சிறுநீரகம் சம்மந்தமான நோயுள்ளவர்கள், தொடர்ச்சியாக நாள்பட்ட வியாதி உள்ளவர்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் என அனைவரும் தவறாமல் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. நாடு முழுவதும் 148 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 23 ஆயிரத்து 819 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 2ம் தவணை தடுப்பூசி 5 லட்சத்து 2 ஆயிரத்து 861 பேர் என மொத்தம் 10 லட்சத்து 26 ஆயிரத்து 680 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். எனவே, தகுதியான நபர்கள் அனைவரும் இந்த தடுப்பூசி முகாமில் கலந்துக் கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா இல்லாத மாவட்டமாக நீலகிரியை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: