ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு கடந்தாண்டு 9.91 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

ஊட்டி, ஜன. 3:  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கடந்த ஆண்டு (2021) ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை (மே, ஜூன், ஜூலை மாதங்கள் தவிர்த்து) 9 லட்சத்து 91 ஆயிரத்து 991 சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாகும். இங்கு நிலவும் குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அவ்வாறு வர கூடிய சுற்றுலா பயணிகள் இங்குள்ள பூங்காக்கள், வனம் சார்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்த்து மகிழ்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பார்கள்.

அவ்வாறு வர கூடிய சுற்றுலா பயணிகள் நூற்றாண்டு புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவை பார்க்காமல் செல்வதில்லை. கடந்த 2019 ஆண்டில் தாவரவியல் பூங்காவிற்கு 28.11 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த சூழலில் 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதனால் அந்த ஆண்டில் வெறும் 6 லட்சத்து 20 ஆயிரம் சுற்றுலா பயணிகளை தாவரவியல் பூங்காவிற்கு வருகை புரிந்திருந்தனர். கடந்த 2021ம் ஆண்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையும் கணிசமாக அதிகரித்தது. ஜனவரி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை 4 லட்சத்து 86 ஆயிரத்து 719 பேர் வருகை புரிந்திருந்தனர். அதன் பின்னர் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரிக்க துவங்கியதால் மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது.

 இதனால் மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்கள் தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டிருந்தது. தொற்று பாதிப்பு குறைய துவங்கிய பின் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் பூங்காக்கள் திறக்கப்பட்டன. அன்றைய தினத்தில் இருந்து டிசம்பர் 31ம் தேதி வரை 5 லட்சத்து 05 ஆயிரத்து 272 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் 9 லட்சத்து 91 ஆயிரத்து 991 பேர் வந்திருந்தனர். இது 2020ம் ஆண்டை காட்டிலும் 3.71 லட்சம் பேர் அதிகமாகும். இந்த சூழலில் தற்போது கோடை சீசனுக்காக பூங்காக்கள் தயராகி வரும் சூழலில் நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், நீலகிரியில் மீண்டும் சுற்றுலா தொழில் பாதிக்குமா என்ற அச்சம் அதனை நம்பியுள்ளவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Stories: