மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை தேவை

ஊட்டி, டிச. 6:  நீலகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குட்கா, போதை பாக்கு, பான்பாரக், பான்மசாலா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், ஒரு சில வியாபாரிகள் கடைகளில் தடைகளை மீறியும் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வப்போது காவல்துறையினர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட வியாபாரிக்கு அபராதம் விதித்தாலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குறைந்தபாடில்லை.

நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து சட்டவிரோதமாக இவை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை ஏற்றும் புகையிலை பாக்கெட்டுகள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. ஹான்ஸ் எனப்படும் புகையிலை பாக்கெட்டுகளை பாக்கெட் ஒன்றுக்கு ரூ.20 முதல் 30 வரை பல மடங்கு விலை வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள சிறு கடைகளில் இவற்றின் விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரத்தில் தலையிட்டு புகையிலை பொருட்கள் விற்பனை கடைகளில் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் கூறுகையில்,``நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களின் விற்பனை அதிகமாக உள்ளது. இவற்றை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தி பாதிப்படைகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: