திருவண்ணாமலையில் மாவட்ட அளவில் இளையோர் தடகள போட்டிகள் 856 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருவண்ணாமலை, டிச.4: திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் நேற்று நடந்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை துணை சபாநாயகர் கு,பிச்சாண்டி வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் நேற்று நடந்தது. அதில், 10 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்ட 580 மாணவர்கள் மற்றும் 285 மாணவிகள் உள்பட மொத்தம் 865 பேர் கலந்து கொண்டனர். தடகள போட்டியில், 100மீ, 200மீ, 400மீ, 1,500மீ, 5,000மீ ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், மும்முனை தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் வயது அடிப்படையில் 55 போட்டிகள் நடந்தது. அதில், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், தடகள போட்டி தொடக்க விழா நேற்று காலை நடந்தது. தடகள சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், மாவட்ட தலைவருமான எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.புகழேந்தி வரவேற்றார். விளையாட்டு போட்டிகளை, தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து பேசியதாவது: விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருகிறார். விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில், உயர்கல்வியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதோடு, ஊக்கத்தொகை, உதவித்தொகை ஆகியன அளிக்கப்படுகிறது. மேலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பதக்கங்களை பெறும் தமிழக வீரர்களுக்கு, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் ஊக்கத்தொகையும், உதவிகளும் வழங்கப்படுகிறது. எனவே, இந்த வாய்ப்புகளை இளம்வீரர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், தடகள சங்க தலைவர் எ.வ.வே.கம்பன் பேசுகையில், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் தடகள சங்கம் செய்கிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம் என்றார். நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ச.அருள்செல்வம், வெற்றி தமிழர் பேரவை தலைவர் ப.கார்த்திவேல்மாறன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் பெரியகருப்பன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தடகள சங்க மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Related Stories: