மாவட்டத்தில் நடப்பாண்டு 1.83 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி., பரிசோதனை கலெக்டர் தகவல்

சேலம், டிச.2: உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலக திட்ட மேலாளர் அருணாசலம் வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் நளினி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நம்பிக்கை மையங்கள் வாயிலாக, எச்.ஐ.வி, எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் (2020-21) அக்டோபர் வரை, சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 941 நபர்கள் எச்.ஐ.வி பரிசோதனையும், ஆலோசனையும் பெற்றுள்ளனர்.

இவர்களில் 324 பேருக்கு புதியதாக எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 68 ஆயிரத்து 967 கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டதில், 21 பேருக்கு புதியதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நடப்பாண்டு எச்.ஐ.வி., தொற்றுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு பிறந்த 102 குழந்தைகளில் 4 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி., ெதாற்று கண்டுப்பிடிக்கப்பட்டு, ஏ.ஆர்.டி, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பால்வினை நோய்க்கு 36 சுகவாழ்வு மையம் மூலமாக, சுமார் 29 ஆயிரத்து 246 நபர்கள் ஆலோசனை மற்றும் பால்வினை நோய் பரிசோதனை பெற்றுள்ளாரகள். இதில் 126 பேருக்கு பால்வினை தொற்று கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டது.

2011ம் ஆண்டு முதல் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி தனியார் கல்லூரிகள் மூலம் 397 மாணவ, மாணவிகள் பெற்று தரப்பட்டது. 2021-22ம் ஆண்டு 26 மாணவர்கள் பயனடைந்தனர்.  மாவட்டத்தில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வாயிலாக ஏற்படுத்தப்பட்டுள்ள அறக்கட்டளை வாயிலாக, 253 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ₹6 லட்சத்து 77 ஆயிரம் பெற்று தரப்பட்டுள்ளது. சேலம், ஆத்தூர், மேட்டூர் ஆகிய மூன்று அரசு ரத்த வங்கிகள் மூலமாக 74 ரத்ததான முகாம்கள் நடைபெற்று, அதன் மூலம் 16 ஆயிரத்து 678 யூனிட்டுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Related Stories: