தனியார் கல்லூரி மாணவருக்கு வந்த மர்ம பார்சலால் பரபரப்பு

திருச்செங்கோடு அருகே

திருச்செங்கோடு, டிச.2: திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரியில் படிக்கும் பீகார் மாணவருக்கு வந்த பார்சலில், போதை பொருள் இருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரத்தில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவர் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு பதிவு தபாலில் நேற்று ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை வாங்க அந்த மாணவர் மறுத்து விட்டதால், போஸ்ட் மாஸ்டர் மணிகண்டன், இதுகுறித்து தபால் ஆய்வாளர் ரஞ்சித்துக்கு தகவல் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து மாணவரிடம் விசாரித்த போது, அந்த பார்சல் தனக்கு வந்தது அல்ல. யார் அனுப்பினார்கள் என்பதும் தனக்கு தெரியாது என கூறிய அந்த மாணவர், கடிதம் எழுதி கொடுத்து விட்டார். இதையடுத்து தபால் அதிகாரிகள் பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் 2 டஜன் பேனாக்கள், செல்போனுக்கு போடும் 2 டெம்பர் கண்ணாடிகள் மற்றும் 60 சிறு பொட்டலங்கள் இருந்தது. சுமார் 800 கிராம் எடை இருந்த அந்த பொட்டலங்களில், மூக்குப்பொடி நிறத்தில் பவுடர் இருந்தது. அது போதைப் பொருளாக இருக்குமோ? என்ற சந்தேகம் தபால் அதிகாரிகளுக்கு எழுந்தது.

அந்த பொட்டலங்களில் ஒரு நிறுவனத்தின் பெயர் பிராண்ட் செய்யப்பட்டிருந்தது. அது குறித்து ஆய்வு செய்த போது, அது ஒரு பல்பொடியின் பெயர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அந்த பார்சலை மல்லசமுத்திரம் போலீசில் ஒப்படைக்கும்படி, தபால் துறையினருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர்கள் அதற்கான பணியை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் கூறுகையில், ‘பீகார் மாணவருக்கு பார்சல் வந்தது குறித்து, எங்களுக்கு எந்தவிதமான தகவலும் வரவில்லை. இதுவரை யாரும் புகார் தரவில்லை. அப்படி புகார் கொடுத்தால், அந்த பொட்டலங்களை பெற்று, தடயவியல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெறப்படும். அந்த பார்சலில் வந்தது போதை பொருளாக இருந்தால், அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இந்நிலையில் தபால்துறை அலுவலர்கள், பார்சலில் வந்த பொட்டலங்களை மல்லசமுத்திரம் போலீசாரிடம் வழங்கி, புகார் தெரிவித்தனர். அதன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், பொட்டலங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More