பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு கலெக்டர் உத்தரவால் நடவடிக்கை பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா?

அணைக்கட்டு, ஏப். 23: பட்டாசு கடைகளில் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவால் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரியில் பட்டாசு கடையில் நடந்த தீ விபத்தில் தாத்தா, 2 பேரன்கள் உடல் கருகி பலியாகினர். இதையடுத்து பட்டாசு கடைகள் உரிய அனுமதியுடன் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடக்கிறதா? என ஆய்வு செய்ய கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டிருந்தார்.

இதில், அணைக்கட்டு தாலுகாவில் 15 பட்டாசு கடைகள் உள்ளன. அந்த கடைகளில் ஆய்வு செய்யும் பணி கடந்த 20ம் தேதி மாலை தொடங்கி நேற்று முன்தினம் மாலை முடிவடைந்தது. இதில் வருவாய், தீயணைப்பு, காவல் துறையினர், மின்சார துறை உள்ளிட்ட 4 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். மண்டல துணை தாசில்தார் பழனி தலைமையில் நடந்த இந்த ஆய்வில் பட்டாசு கடைகளில் நிர்ணயிக்கபட்ட அளவைவிட அதிகளவில் பட்டாசுகள் இருப்பு உள்ளதா? கடை நடத்த அனுமதி உள்ளதா, உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா, கடை நடத்த அனுமதி கொடுத்த கிராமத்தில் இயங்கி வருகிறதா? தீ தடுப்பு பாதுகாப்பு உபகரணகங்கள் உள்ளதா, தீ அணைப்பு வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் வருவதற்கு போதுமான அளவுக்கு சாலை வசதி உள்ளதா என கடை உரிமையாளர்களிடம் விசாரித்து, பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்து ஆலோசனை வழங்கினர்.

இதேபோல் வேலூர் தாலுகா பென்னாத்தூரில் பட்டாசு கடைகளில் ஆய்வு நடந்தது.

Related Stories:

>