வேலூர் மாவட்ட நீதிபதிகள் 8 பேர் பணியிட மாற்றம்

வேலூர், ஏப்.20: வேலூர் மாவட்டத்தில் 5 மாவட்ட நீதிபதிகள் 8 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, வேலூர், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 41 மாவட்ட நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் மாவட்ட கூடுதல் நீதிபதி வெற்றிச்செல்வி, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதில் சென்னை குடும்பநல கூடுதல் முதன்மை நீதிபதி ஜே.சாந்தி வேலூர் மாவட்ட கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.

வேலூர் பெண்களுக்கு எதிரான போஸ்கோ சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற செஷன்ஸ் நீதிபதி எம்.செல்வம் கிருஷ்ணகிரி குடும்பநல நீதிமன்ற நீதிபதி காலி பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். வேலூர் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி ஏ.முரளிதரன், கோயம்புத்தூர் குடும்பநல நீதிமன்ற கூடுதல் முதன்மை நீதிபதியாகவும், இப்பொறுப்பில் இருக்கும் பி.குமார், வேலூர் விரைவு நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் கூடுதல் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி என்.மணிவண்ணன் வேலூர் தொழிலாளர் நீதிமன்றத்துக்கும், வேலூர் கூடுதல் தொழிலாளர் நீதிமன்றத்துக்கு தேனி மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி வி.ரவிச்சந்திரனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மகளிர் விரைவு நீதிமன்ற செஷன்ஸ் நீதிபதி கே.பாலசுப்ரமணியன், சென்னை 4வது கூடுதல் குடும்பநல நீதிமன்றத்துக்கும், சென்னை 5வது கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதி எஸ்.ரவி, வேலூர் போஸ்கோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு மகளிர் நீதிமன்ற செஷன்ஸ் நீதிபதியாகவும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். இவர்கள் உட்பட மொத்தம் 41 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.

Related Stories:

>