வதந்திகளை நம்பாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்: வட்டார மருத்துவ அலுவலர் அறிவுறுத்தல் கலசபாக்கத்தில் ெபாதுமக்களுக்கு விழிப்புணர்வு

கலசபாக்கம், ஏப்.20: கலசபாக்கத்தில் வதந்திகளை நம்பாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு வட்டார மருத்துவ அலவலர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழகத்தில் இன்று முதல் கொரோனா பரவலைத் தடுக்க புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கலசபாக்கம் வட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் கவுதம் ராம் தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் கிராமங்கள் தோறும் முகாமிட்டு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மேல்பாலூர், பாடகம், மேலாரணி உள்ளிட்ட கிராமங்களில் வட்டார மருத்துவ அலுவலர் கவுதம் ராம் தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரும்பாலான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஏதேனும் பாதிப்பு வரும் என்று பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தெரிவித்தனர். அப்போது வட்டார மருத்துவ அலுவலர் கவுதம் ராம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துண்டுப்பிரசுரங்களை வழங்கினார். மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்வதால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. விலை மதிப்பில்லாத உங்கள் உயிர்களை பாதுகாத்திட தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். எனவே யாரும் பயப்பட வேண்டாம். எனவே பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டிய பொதுமக்கள், தடுப்பூசி போட முன்வந்தனர். இருப்பினும் கிராமப்புறங்களில் தடுப்பூசி போடுவதற்கு அதிக அளவில் பொதுமக்கள் ஆர்வம் செலுத்தவில்லை. இதனால் சுகாதாரத்துறை ஊழியர்கள் முகாம்கள் நடத்தும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

Related Stories: