கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் 75 சிறப்பு முகாம்கள் மூடல் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள் வேலூர் மாவட்டத்தில்

வேலூர், ஏப்.19: வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இருப்பு குறைந்ததை அடுத்து மாவட்டம் முழுவதும் இயங்கி வந்த தடுப்பூசி போடுவதற்கான 75 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா 2வது அலையின் வேகம் தீவிரமடைந்துள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் துவக்கத்தில் ஒரு நாளில் 4 மதல் 6 வரை இருந்த தொற்று பாதிப்பின் எண்ணிக்கை நேற்று 192 ஆக இருந்தது. இது இன்னும் அதிகரிக்கும் என்றே சுகாதாரத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு கொரோனா பரிசோதனை முகாம்களுடன், தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டன. இவ்வாறு மாவட்டம் முழுவதும் 75 சிறப்பு மருத்துவ முகாம்கள் பெட்ரோல் பங்குகள், திருமண மண்டபங்கள், பஸ் நிலையங்கள் என பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வந்தன. இதுதவிர வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனை உட்பட 4 அரசு மருத்துவமனைகள், 46 நகர்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 24 நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் தடுப்பூசி முகாம்களும், கொரோனா பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இம்முகாம்களில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக கொரோனா தடுப்பு முன்களப்பணியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டன. தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 லட்சத்து 57 ஆயிரத்து 310 பேர். இவர்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 437 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை மொத்தம் 1 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி இருப்பு குறைந்து தட்டுப்பாடு ஏற்ட்டதால், வேலூர் மாநகராட்சி உட்பட மாவட்டத்தில் பெட்ரோல் பங்க், திருமண மண்டபங்கள், பஸ் நிலையங்களில் நடத்தப்பட்டு வந்த கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் கடந்த 2 நாட்களாக நடத்தப்படவில்லை. இதனால் ெபாதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அதேபோல் வேலூர் மாநகராட்சியில் சத்துவாச்சாரி, அம்பேத்கர் நகர், தொரப்பாடி உட்பட ஒரு சில மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தற்போதைய நிலையில் 4 ஆயிரம் குப்பிகள் மட்டுமே தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. 1 லட்சம் குப்பிகள் வரை அரசிடம் கேட்டுள்ளோம். 50 ஆயிரம் குப்பிகளாவது வந்தால்தான் சமாளிக்க முடியும். இல்லையென்றால் தற்போது தடுப்பூசி போடும் மையங்களையும் தடுப்பூசிகள் வரும் வரை மூட வேண்டியதுதான்’ என்றனர்.

ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனைக்கு டாக்டர் தேவையில்லை

டாக்டர்கள் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி போடப்படும் மையங்களில் ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனைக்கு டாக்டர்கள் இருக்க வேண்டும் என்பது இல்லை. பரிசோதனை முடித்து டாக்டர் ஒப்புதலுடனே தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதேபோல் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள், ரத்த மாதிரிகள் எடுப்பதற்கும் டாக்டர்கள் தேவையில்லை. பயிற்சி பெற்ற பணியாளர்களே போதும். பரிசோதனை கூடங்களுக்கு சாம்பிள்கள் அனுப்பி வைக்கப்பட்டு அங்குதான் முடிவுகள் பெறப்படுகின்றன. ஏற்கனவே அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் தொற்றா நோய் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்ட போதும் ஒரு செவிலியர், செவிலிய உதவியாளர் மட்டும்தான் பணியமர்த்தப்பட்டனர்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: