ஆண்டிபட்டியில் குளிக்கவும் முடியல; சமைக்கவும் வழியில்லை

ஆண்டிபட்டி, ஏப். 19: ஆண்டிபட்டி பகுதியில் 15 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நகர்ப்பகுதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குன்னூர் அருகே வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த அரப்படித்தேவன்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதில் போதுமான குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் மாற்று திட்டம் கொண்டு வர அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வைகை அணையிலிருந்து புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2018 ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்த, இந்திட்டம் மூலம் நாளொன்றுக்கு 22 லட்சம் லிட்டர் சுத்திகரப்பு செய்யப்பட்டு நகர்ப்பகுதிக்கு விநியோகிக்கபட்டு வந்தது. அதன்படி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்கள் வாரியாக, 3 தினங்களுக்கு ஓருமுறை குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பேரூராட்சி பகுதியில் குடிநீர் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக 15 தினங்களுக்கு ஓருமுறையே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நகர்ப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறியாதாவது, தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்களுக்கான குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. பொதுமக்களின் தேவைக்கு திறக்கப்பட வேண்டிய குடிநீரை திருமண மண்டபங்கள், உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு திருட்டுத்தனமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீரில்லாமல் குளிக்கவும் முடியவில்லை, சமைக்கவும் வழியில்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பேரூராட்சி ஊழியர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றனர்.

Related Stories: