தா.பழூர் அருகே தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய 4 பேர் கைது

தா.பழூர், ஏப்.18: தா.பழூர் அருகே தனியார் பஸ் கண்டக்டரை சரமாரியாக தாக்கிய 4 பேரை கைது செய்த போலீசார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கீரங்குடி ராமையன் மகன் அன்பரசன் (45). தனியார் பஸ் கண்டக்டர். சம்பவத்தன்று ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தில் பணியில் இருந்துள்ளார். கீழ சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் பஸ்சில் அமர்ந்திருந்தார். அவரிடம் கண்டக்டர் அன்பரசன் இந்தப் பேருந்து இப்போது கும்பகோணம் செல்லாது, அதற்கு முன்னதாக வேறொரு பேருந்து இருக்கிறது என்று தட்டி எழும்பிபோக சொன்னதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு அதே பேருந்து அன்பரசன் பணியிலிருந்தார். பஸ் ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்றது. அப்போது அதே இளம்பெண் பஸ்சில் ஏறி கீழ சிந்தாமணி செல்வதற்காக டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணம் செய்தார்.

பஸ் கீழ சிந்தாமணி பேருந்து நிறுத்தத்தில் நின்றவுடன் திடீரென இளம்பெண்ணின் உறவினர்கள் மற்றும் அடையாளம் தெரியாத 20 பேர் பேருந்தில் ஏறி நடத்துனர் அன்பரசனிடம் எங்கள் வீட்டுப் பெண் மேல் எப்படி கை வைத்தாய் என்று கேட்டு அடித்ததோடு சுமைதூக்கும் கொக்கியால் வாயிலும், முகத்திலும் கடுமையாக தாக்கியதுடன் டிக்கெட் இயந்திரத்தை உடைத்து, பேக்கில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை திருடிச் சென்று விட்டனர். பலத்த காயமடைந்த அன்பரசன் தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மேலும் அன்பரசன் கொடுத்த புகாரின் தா.பழூர் எஸ்ஐ ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவத்தில் இளம்பெண்ணின் உறவினர்கள் சாமிநாதன் (58), மாரிமுத்து (32), வீரமணி (21), செல்வராசு (58) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More