8 கவுன்டர்களில் 2 மட்டும் திறப்பு மின்கட்டணம் செலுத்த பலமணி நேரம் காத்திருப்பு

விருதுநகர், ஏப்.16: விருதுநகர் தலைமை நூலகம் அருகே உள்ள மேற்கு மின்வாரிய அலுவலகத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் சேவையில் உள்ளன. 2 மாதம் ஒரு மின்கட்டணத்தை கட்ட வரும் மக்கள் மணிக்கணக்கில் நிற்க வேண்டிய அவலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது. மேற்கு மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்த 8 கவுன்டர்கள் இருந்தாலும் 2 கவுன்டர்கள் தான் திறக்கப்படுகின்றன. இந்த இரண்டிலும் வேகமாக செயல்படக்கூடிய அலுவலர்களை நியமிப்பது இல்லை. ஆமை வேகத்தில் செயல்படக்கூடிய இருவரை நியமித்து ஆதிகால கம்ப்யூட்டர், பிரிண்டர்களால் வசூல் தாமதப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது.

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தும் முறையில் குளறுபடிகள் ஏற்படுவதால் மின்வாரியத்தில் நேரில் வந்து கட்டணம் செலுத்தவே மக்கள் விரும்புகின்றனர். விருதுநகர் மேற்கு மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்த சென்றால் வீடு திரும்ப பல மணி நேரமாவதாக வாடிக்கையாளர்கள் புலம்புகின்றனர். அதிலும் கட்டணத்தை செக்கில் செலுத்த செல்லும் வாடிக்கையாளர்களை,`` ஏன் லேட்டா வருகிறீர்கள், விரைவாக, நேரத்திற்கு வரவேண்டமா?’’ பல கேள்விகள் கேட்டு குடைந்து எடுக்கின்றனர். கட்டணம் செலுத்தும் கவுன்டர் பகுதிகளில் எந்த அறிவிப்பு எழுத்துப்பூர்வமாக எழுதி வைக்காமல் வாடிக்கையாளர்களை வாட்டி எடுப்பதும், எரிந்து விழுவதும் சரியா என்ற கேள்வியை மக்கள் கேட்கின்றனர். மின்துறை அதிகாரிகள் கட்டண வசூலுக்கு கூடுதல் அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: