புதுச்சேரி, காரைக்காலில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது மீன்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு

புதுச்சேரி, ஏப். 16: புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் 61 நாட்களுக்கான மீன்பிடி தடைகாலம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் மீன்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.  கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்துக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம்தேதி முதல் ஜூன் 14ம்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப் படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான மீன்பிடி தடைகாலம் நேற்று 15ம்தேதி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் தொடங்கியது. மீன்பிடி தடைகாலத்தையொட்டி ஆழ்கடலில் இருந்த அனைத்து விசைபடகுகளும், பைபர் படகுகளும் கரை திரும்பின. புதுச்சேரி பிராந்தியத்தில் கனகசெட்டிகுளம் முதல் மூர்த்திகுப்பம் வரையிலும், காரைக்கால் பிராந்தியத்தில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலும், ஏனாமிலும் கடல் பகுதிகளிலும், பாரம்பரியமான மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலை கொண்ட விசைப்படகில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான படகுகள் கடலுக்கு செல்லாததால் ஓய்வில் உள்ள மீனவர்கள் தங்களது விசைப்படகு

களையும், வலைகளையும் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

 மீன்பிடி தடைகாலம் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் அடுத்தடுத்த நாட்களில் மீன்களின் விலை அதிகரிக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கருவாடு மற்றும் ஏரி மீன்களின் விற்பனையும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.  இதேபோல் காரைக்காலிலும் 61 நாள் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது. அங்கு மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலான 11 மீனவ கிராமங்களில் வசிக்கும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. மாகே பிராந்தியத்தில் ஜூன் 1 முதல் ஜூலை 31ம்தேதி வரை (61 நாட்கள்) இழுவலைகளை கொண்டு விசைப்படகில் மீன்பிடிக்க தடை செய்யப்பட உள்ளது.  இதனிடையே மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்துள்ளதால் தடைகால நிவாரணத்தை உரிய காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு அரசு வழங்க வேண்டுமென மீனவ அமைப்புகள், பஞ்சாயத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தாண்டு நிவாரணத்தை உயர்த்தி வழங்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: