வரும் 2ம் தேதி வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜைகளை தவிர வேறு மேஜைக்கு செல்ல தடை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்

வேலூர், ஏப்.16: வரும் 2ம் தேதி வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜைகளை தவிர வேறு மேஜைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் வரும் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வேட்பாளர்களுக்கும், முதன்மை முகவர்களுக்கும், வாக்கு எண்ணிக்கை இடத்தில் உள்ள முகவர்களுக்கும் அடையாள அட்டைகள் தனித்தனியே வழங்கப்படும். இதனை வருகிற 23ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் கொண்டு வர அனுமதி இல்லை. தேவைப்பட்டால் வாக்குச்சாவடியில் பெற்ற படிவம் 17சி, பேனா, பென்சில் நோட்டு புத்தகம், வெள்ளை காகிதம் கொண்டு வர முகவர்களுக்கு அனுமதி உண்டு. வாக்கு எண்ணும் மையத்திற்குள் குடிநீர் வசதி செய்து தரப்படும். அனைத்து வேட்பாளர்களும் முதன்மை முகவர்களும் 2ம் தேதி காலை 6.30 மணியளவில் ஆஜராக வேண்டும். முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும் வரும் முகவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை தவறாமல் அணிந்து வர வேண்டும். அடையாள அட்டை இல்லாவிட்டால் அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் நாளன்று வேட்பாளர்கள் உபயோகத்திற்காக ஒரு வாகனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். வாக்கு எண்ணும் மைய முகவருக்கு வேட்பாளரே உணவு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அசைவ உணவுக்கு அனுமதியில்லை. வாக்கு எண்ணிக்கை தொடர்ச்சியாக நடைபெறுவதால் முகவர்களுக்கு உணவு சாப்பிட தனி நேரம் ஒதுக்கப்படாது. முகவர்கள் சுழற்சி முறையில் உணவு அருந்திக்கொள்ள வேண்டும்.வாக்கு எண்ணும் மையத்திற்குள் புகை பிடிக்க அனுமதி கிடையாது. வாக்கு எண்ணிக்கை இடத்தில் முகவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜைகளை தவிர வேறு எந்த மேஜைக்கும் செல்ல அனுமதி கிடையாது.

வாக்கு எண்ணும் அறைக்குள் தேவையின்றி பேசுவதும், சத்தம் எழுப்புவதாலும் வாக்கும் எண்ணும் பணியில் தொய்வு ஏற்பட நேரிடும். அதனை தவிர்க்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி முடிந்தவுடன், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குலுக்கல் முறையில் 5 வாக்குச்சாவடிகளை தேர்வு செய்து, வாக்குச்சாவடிகளுக்கான விவிபேட் சிலிப் எண்ணப்படும். இந்த பணி முடிவுற்ற பிறகே இறுதி வாக்கு எண்ணும் முடிவினை தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories:

>