விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

சேலம், ஏப்.16: சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே இறுதி வரை கோடைகாலமாகும். இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். நடப்பாண்டை பொருத்தமட்டில் பிப்ரவரி 20ம் தேதிக்கு மேல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதன் எதிரொலியாக கடந்த மார்ச் மாதம் சேலத்தில் எப்போது இல்லாத அளவுக்கு 109 டிகிரி வெப்பநிலை பதிவானது. சேலத்தில் 108 டிகிரி வெப்பநிலையே அதிகபட்சமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக மழை இல்லாமல் வறண்ட வானிலையே காணப்பட்டது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டைகள் வேகமாக வறண்டு வருகிறது. வளிமண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவியது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு சுமார் ஒரு மணியளவில் வானில் இடி இடித்தது. பின்னர் சுமார் 2 மணியளவில் சேலம் மாவட்டம் முழுவதும் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இம்மழையால் கடந்த ஒன்றரை மாதமாக காய்ந்த நிலங்கள் சற்று ஈரப்பதமாக மாறியது. இரவில் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

மழையால் சேலத்தில் நாராயணநகர், சித்தேஸ்வரா, கடைவீதி, அம்மாப்பேட்டை, 5 ரோடு, 4 ரோடு, குகை உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களாக கடும் வெயிலில் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு நேற்றுமுன் தினம் இரவு பெய்த மழை சற்று ஆறுதலை தந்துள்ளது. மழை காரணமாக விவசாய நிலங்களில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் மழையளவு விபரம்: (மில்லிமீட்டரில்): தம்மம்பட்டி 15, காடையாம்பட்டி 19, கரியகோவில் 35, ஆணைமடுவு 27, வாழப்பாடி 3, எடப்பாடி 9, ஏற்காடு 42, சங்ககிரி 14.3, ஓமலூர் 7.4, மேட்டூர் 7.5, சேலம் 10.5, ஆத்தூர் 6.4, பெத்தநாயக்கன்பாளையம் 4 மில்லிமீட்டர் பதிவானது.

வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் கனமழை பெய்தது. வாழப்பாடி அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறை அறுநூற்றுமலை, ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில், 2வது நாளாக மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடை வெப்பம் தனிந்து, இரவில் குளிர் காற்று வீசியது. நேற்று முன்தினம் புழுதிக்குட்டை ஆணைமடுவு நீர்தேக்கம் பகுதியில் 27 மிமீ., பாப்பநாயக்கன்பட்டி கரியகோயில் அணை பகுதியில் 35 மிமீ மழையும் பதிவாகி இருந்தது.

Related Stories: